Tuesday, January 25, 2011

ராஷ்மிகாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி



தி.நகர், வாணி மகாலில், 11ம் தேதி, ராஷ்மிகாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. நயம் பேசும் கண்களுடன் அவர் நடனம் ஆடிய விதம் அருமை. "கஜமுகா மாமுகனே' என்ற வரமு ராகக் கிருதியில் புஷ்பாஞ்சலி செய்தார். துவக்கமே, கம்பீரமாய் அமைந்தது. அதன்பின், சிவரஞ்சனி ராகத்தில், "சாமி நீ மனம் இறங்கி' என்ற வர்ணத்திற்கு, மிக அருமையாக அபிநயம் பிடித்து, ஜதியில் அனைவரையும் ஈர்த்தார். "இடது பாதம் தூக்கி' பாடலுக்கு, குரு ஸ்ரீகலா பரத்தின் பெயரைப் பறைசாற்றும்படி ஆடினார். சிதம்பரம் நாட்டியாஞ்சலியைப் பார்த்த திருப்தி ஏற்பட்டது. அடுத்த நாம சங்கீர்த்தனத்தில், "வன மாலி' பாடலுக்கு நிறைவான நடனத்தை கொடுத்தார். இப்படி அடக்கி வாசித்தது ஏன் என நாம் யோசிப்பதற்குள், லால்குடி ஜெயராமனின் தில்லானாவில், ஜதி பேசுவதைக் குறிப்பறிந்து இவர் கால்கள் பேசியது, அனைவரின் கைதட்டலைப் பெற்றது. பாடுவதற்கு எளிதாக தெரிந்தாலும், மிஸ்ர சாபு தாளத்திற்கு நடனம் ஆடுவது எவ்வளவு கடினம் என்பது ஆடுபவர்களுக்கு தெரியும். ஆனால், "அதெல்லாம் எனக்கு பெரிய விஷயமில்லை' என்பது போல், ராஷ்மிகா ஆடியது, குருவின் தீவிர பயிற்சியை எடுத்துரைத்தது.