Monday, February 14, 2011

சிறப்பாக அபிநயித்தார் சாரதா

நுங்கம்பாக்கம் கல்சுரல் அகடமியின் நாட்டிய விழாவின் வரிசையில், இளங் கலைஞர்களுக்கான பங்களிப்பில் சாரதா இளங்கோவனின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பாரம்பரிய கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். தவில் மேதை ராகவப் பிள்ளை பரம்பரையில், தவில் கலைஞர்கள் பலர் நல்ல நிலையில் வந்துள்ளனர். சாரதா நாட்டியத்தில் தன் பங்கை தொடர்ந்திருக்கிறார். நட்டுவாங்கம் குரு மாலா சங்கரி சுப்ரமண்யம், தவில் - டி.ஆர்.கோவிந்தராஜன் கிருஷ்ணமூர்த்தி, கதிரவன் - நாகஸ்வரம், கவுசிக் சம்பாகேசன் குரலிலும், பாலசுப்ரமணியம் வயலினில், எம்.பாலாஜி மிருதங்கத்திலும் சாரதாவின் நாட்டியத்திற்கு கை கோர்த்தனர்.
மல்லாரி எனும் பாரம்பரிய இசை வடிவத்திற்கு கம்பீர நாட்டையில் அழகுடன் நாகஸ்வரமும், தவிலும் இணைந்து கொடுத்து சிறப்பித்தனர். அடுத்து ஹம்சத்வனி ராகத்தில் நடேச கவுத்துவம் நடன வடிவத்தைக் கொடுத்து நடராஜனுக்கு நடன அஞ்சலி செய்தார். அடுத்து உலகம் புகழும் நாட்டிய கலையே என்ற தண்டாயுதபாணி பிள்ளையின் அருமையான சாகித்யத்திற்கு, தனது நடனத்தை குருவின் ஜதி அமைப்பிற்கு ஆடி சிறப்பித்தார்.
அன்னமய்யாவின் ஸ்ரீமன் நாராயணா என்ற அற்புதமான சாகித்யம். மாதங்களில் நான் மார்கழியாக உள்ளேன் என்ற பரந்தாமனின் பாதமலரை தொட்டு தன் நடனத்தை கொடுத்தார். 
அடுத்து, ஆடல் கலையை வகுத்த நடராஜனுக்கு அர்ப்பணமாக மிக பிரபலமான பாடலான "போசம்போ' ரேவதி ராக பாடல் அதைத் தொடர்ந்து "சின்னஞ்சிறு கிளியே' சுப்பிரமண்ய பாரதியின் கனவு குழந்தை கண்ணம்மாவை சாரதா தொட்டு உச்சிமுகர்ந்து கொடுத்தார். அடுத்து நிறைவாக பழைய பாணி பாடல் "நாதர் முடிமேலிருக்கும் நாக பாம்பே' என்று சாரதாவின் சில் போன்ற உடல் வில் போன்று பாம்பு நடனத்திற்கு ஏற்றவாறு கொடுத்தார். மிகவும் சிறப்பாக நடன நிகழ்ச்சி இருந்தது.

பரதநாட்டிய அரங்கேற்றம்






சென்னை, மயிலாப்பூர் சிவகாமி பெத்தாச்சி அரங்கில், சஞ்சனா ராம்குமாரின் பரத நாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடந்தது.
 

பாராட்டு பெற்ற சாய்தர்ஷிணியின் அரங்கேற்றம்

 நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருப்பது நடன நிகழ்ச்சிகள். அதிலும், குறிப்பாக நடன அரங்கேற்றங்கள் பல முழுமை பெறாமல், அதாவது ஆடுபவர்கள் முதிர்ச்சி பெற்று கொடுக்காமல் ஏனோ தானே என்று தான் நடைபெற்று வருகின்றன. அரங்கேற்றம் என்று கற்றுக் கொண்ட ஒன்றரை ஆண்டுகளுக்குள், அனைத்தையும் முடித்து விடும் பலர் உள்ளனர். அவர்களுக்கென்று சில சபாக்களில் நடன நிகழ்ச்சி நடத்த காசு கொடுத்து, நேரம் பிடித்து தரப்படுகிறது. அப்படி அவர்கள் அளிக்கும் நடனத்தை, யார் பார்ப்பது என்று தான் புரியவில்லை. இந்த அறியாமையிலிருந்து மீண்டு அவர்கள் வெளியில் வரமாட்டார்களா? நல்ல நடனம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள மாட்டார்களா என்ற ஆதங்கம் நிறைய தோன்றுகிறது.
இந்த விழிப்புணர்வு, பெற்றோருக்கும் ஆடுபவர்களுக்கும் கண்டிப்பாக வந்தே தீர வேண்டும். இல்லையேல், இப்போதுள்ள விலைவாசியில் ஒரு கலைக்கு நாம் செலவிடும் பணம் கூட, "விழலுக்கு இறைத்த நீர் போல்' ஆகி விடும். ஆனால், மேற்சொன்ன அனைத்திலுமிருந்து குறை என்று சொல்ல முடியாத அளவு, அர்த்தமுள்ள அரங்கேற்றமாய் நடந்தது சாய்தர்ஷிணியின் அரங்கேற்றம். சாய்தர்ஷிணியின் குரு தஞ்சை அருணாச்சலம், ஜெயலட்சுமி அருணாச்சலம், டாக்டர் சரஸ்வதி மற்றும் கலாஷேத்ராவின் ரகுராமன், மோகன் ஆகியோரிடம் பயின்று, நடனத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். குச்சுப்புடி நடனத்திற்காக மாதவ பெட்டி மூர்த்தியிடம் பயிற்சி எடுத்தவர்.
பல விருதுகளையும் பல நடன நிகழ்ச்சிகளையும் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் கொடுத்து வருபவர் சாய்தர்ஷிணி. அனுபவமிக்க இப்படியொரு குருவை பெற்றதால் தான், அவருக்கு மிக இயல்பாகவே நடனத்தை உள்வாங்கி ஆடும் திறன் உள்ளது. தன் ஏழு வயது முதல் நடனம் பயிலத் துவங்கி இன்று பி.எஸ்., சீனியர் செகண்டரி பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். படிப்பிலும் மட்டுமல்லாது, பல துறைகளிலும் தன்னை மேம்படுத்திக் கொண்டு, தன் நடனப்பள்ளி மூலம் 75 நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்திக் கொடுத்துள்ளார்.
ஆடுபவர்களுக்கு உடல் அமைப்பு குறிப்பாக, முகத்தில் கண்கள் விழி பேசும் கண்களாக, கவி பாடும் கண்களாக அமைந்திருத்தல் வேண்டும். அப்படி கண், மூக்கு<, புருவங்கள் எல்லாம் ஒரு சேர அமைவது மிகக் கடினம்.
தர்ஷிணியின் குரு ஹேமலதா நட்டுவாங்கத்திலும், சொக்கத்தங்கக் குரலில் மீரா ரமேஷ், மிருதங்கத்தில் சேகர், வயலினில் சீனிவாசன், குழலில் சங்கர நாராயணன் ஆகிய அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு, ஒரு குரலிசை கச்சேரிக்கு பக்கவாத்தியம் போல் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். ஒப்பனை சுமதி, தர்ஷிணியின் முகத்தை மிகைப்படுத்தாமல் நேர்த்தியாக ஒப்பனை செய்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக பங்கெடுத்த அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன் இருவரும் சாய்தர்ஷிணியை புகழ்ந்து தள்ளினர். இத்தனை பாராட்டுதல்களுக்கும் 1 சதவீதம் குறைவில்லாமல், தன் நடனத்தை கொடுத்தார் சாய்தர்ஷிணி.
மல்லாரி என்ற இசை வடிவத்திற்கு தன் நடனத்தை புறப்பாட்டு நடனமாக முதலில் பாரம்பரியமாகக் கொடுத்தார். மோகன ராக ஜதிசீவரம் மனதை கொள்ளை கொண்டு போனது. அடுத்த ராக மாலிகையாக அமைந்த சப்தத்திற்கு, தர்ஷிணியின் நடனம் அருமை. மயிலையின் அக்காலத்து அழகை, பாட்டில் மிக அழகாகக் கொடுத்திருந்தனர். மாட மாளிகை, கூட கோபுரம், மாட வீதி கண்டீரோ? வாசலில் மாக்கோலம் போட்டு தோரணமிட்டு அலங்கரித்து உற்சவர் வீதியுலா வரும் போது, கூடி இருப்பவர் பஜனை செய்து பாடி வர, பல்லக்கில் அவரது அழகு பவனியையும், ஈசனும் நாயகியும் எத்தனை அழகுடன் இருந்தனர்' என்பதற்கு கயல்விழியின் அழகு கற்பகத்தில் பூரண நிலவு போல் அதில் கருணை மட்டும் கடலாய் தெரிய அன்னையின் உயர்ந்த அருளுக்கு ரசிக்கக் கிடைத்தது.
மேலும், மாலை வேளையில் பெண்கள் தங்களை மிக நேர்த்தியுடன் அலங்கரித்துக் கொண்டு எப்படி தங்களை ஆன்மிகத்துடன் இணைத்துக் கொண்டனர் என்று பல அரிய செய்திகளை உள்ளடங்கிய அம்சமாக மிளிர்ந்தது.
நடன மணிகளுக்கு பெயர் வாங்கி தரும் வர்ணம் ஷண்முகப்பிரியா ராகத்தில் அமைந்ததை மிக அற்புதமாக கொடுத்தார். தேவர், முனிவர் தொழும் பாதம் ஜகநாதன் என்ற வரிகளில் தேவர்களும், அசுரர்களும் மந்திர மலையை கடைந்தது, மோகினியாய் மீறி அமிர்தம் பரிமாறியது, கருட வாகன பெருமானாய், திருமகள் உறை மார்பனாக, மகாபாரத கண்ணனாக, பாஞ்சாலியாக, சகுனியாக, தருமனாக, துச்சாதனனாக, வாமனனாக, அனைத்து அவதார மூர்த்தியாக திருவேங்கடகிரி கமலக்கண்ணனாக ஏழு மலை யானை விதம் விதமாக நமக்கு மயிலையில் காணக் கிடைத்தது,
பாரதியின் சின்னஞ்சிறு கிளியே-வில் கனவுக் குழந்தை கண்ணம்மா மீண்டும் உயிர்த்தெழுந்தான் தர்ஷிணியின் நடனத்தில். இக்காலத்து அம்மாக்கள் இவர் நடனத்தை பார்த்தாவது, குழந்தை வளர்ப்பை கற்றுக் கொள்ளட்டும் என்பது போல் இருந்தது. கல்யாண வசந்த ராகத்தில் அமைந்த தெவிட்டாத திருநடனம் பாடல் நிஜத்திலும் தெவிட்டாமலும், தில்லானா அம்ருத வர்ஷிணிராக மதுரை முரளீதரனின் சாகிதயம் மிக அற்புதமாகக் கொடுத்தார் சாய்தர்ஷிணி. அரங்கேற்றம் என்பதற்கு உண்மையான பொருளுணர்த்திய நடனம் என்றால் அது மிகையல்ல.

மன நிறைவை தந்த இரு நடனங்கள்



கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் நாட்டிய விழாவில் இரு நடன நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைந்தன. இதில் நாரத கான சபா மினி அரங்கில் ஐஸ்வர்யா நடன நிகழ்ச்சி நடந்தது. நடன குரு ஆச்சார்ய சூடாமணி அனிதா குகா நடனத்தில் சிறந்த உத்திகளை புகுத்தி சாதனை படைத்து வரும் கிரியேட்டிவ் குரு. ஐஸ்வர்யாவின் அழகான தோற்றம், உயரம், கொடியுடல், துடியிடை எல்லாமே படு ப்ளஸ் அம்சங்கள் என்பதால், மேடையில் அவர் தோன்றிய உடனேயே ரசிக உள்ளங்களும் பறி போகின்றன.
இளம் பாடகர் முரளி பார்த்தசாரதியின் இசை அமைப்புடன் அமைந்த வலஜி ராக புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியின் துவக்கத்தில் மனதை குளிர வைத்தது. ஐஸ்வர்யாவின் அருமையான பாதவேலைகள் கூடுதல் மெருகாக துவக்கமே படுஜோர் என்று கூறலாம்.ஐஸ்வர்யா பிரதானமாக ஆட எடுத்து கொண்ட தஞ்சை நால்வர்களுடைய அபூர்வமான வர்ணமான கருண ஜுட (மிச்ர சாபு) என்ற அரிய இந்த உருப்படியை எடுத்து ஆடினார். பிரபல சமஸ்கிருத மேதை டாக்டர் ராகவன் இசை நாட்டியத் துறைக்கு செய்த சேவைகள் எண்ணற்றவை. குறிப்பாக அவருடைய புதல்வி நந்தினி ரமணியும் தஞ்சை கிட்டப்பா பிள்ளையும் கடும் உழைப்பில் வெளிக் கொணர்ந்த தஞ்சை நால்வர் நாட்டிய இசை நூல் வெளியிடும் தருணத்தில், தஞ்சை கிட்டப்பா பிள்ளையின் மறைவு பெரும் இழப்பாக இருந்தது.
அவர் மறைந்து ஒரு மாதத்திற்கு பின்பு நடைபெற்ற டிசம்பர் சீசனில், சென்னை மியூசிக் அகடமியில் இந்த தஞ்சை நால்வர் இசை உருப்படிகளை கொண்ட நூல் வெளிப்பட்டது. கிட்டத்தட்ட பதினைந்து உருப்படிகள் இந்த நூலில் இருந்தன. இந்த நூலில் இருந்து இப்படிப்பட்ட அபூர்வமான வர்ணத்தை ஆட அனிதா திட்டமிட்டது பெரும் ஆறுதல். வழக்கமாக பார்த்து அலுத்துப் போன வர்ணங்களை விட, இது பார்க்க படு சுவாரசியமாக வும் தஞ்சை பிரகதீசுவரர் மீது காதல் கொண்ட நாயகியின் தாப உணர்ச்சிகளை வரிக்கு வரி ஐஸ்வர் யாவின் அபிநயத் திலும் பளிச்சென்று இருந்த கடவுகள், தீர்மானங்களில் லயம் பிறழாமல் நின்று ஆடிய ஈடுபாடு அருமை.எல்லாமே படு உயர்வான கற்பனைகளுடன் இருந்தன. இந்த வர்ணத்தின் உட்பொருள். ஜதிக்கோர்வை களுக்கு ஏற்ப கட்டுக்கோப்பான அமைப்பு எல்லாமே தஞ்சை நால்வர்களுடைய பொற்காலத்தை நினைவூட்டின என்பதே உண்மையான அனுபவம். சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் காவடி சிந்து (திச்ர சதுச்ர நடை) நடன அமைப்பும், லயமும் முதல் தரமாக மனம் கவர்ந்தன. வீணை சேஷண்ணா இயற்றிய செஞ்சுருட்டி தில்லானா நிகழ்ச்சியில் மற்றொரு அபூர்வ உருப்படியாக பார்க்க மனம் மகிழ்ச்சியாக இருந்தது.
ஆச்சார்ய சூடாமணி அனிதா குகாவின் உயர்வான நடன அமைப்பு, நட்டுவாங்கம், அரி பிரசாத்தின் மதுரமான பாட்டு, ராம்சங்கர் பாபுவின் சிறப்பான லயம், ரமேஷ் குழ லிசை எல்லாமே கூடுதல் மெருகு நிகழ்ச்சிக்கு. ஐஸ்வர்யா எதிர் காலத் தின் நம் பிக்கை நட்சத் திரம் என்பது நிச்சயம். சரயு சாயி: மற்றொரு நடன மணி சரயூ சாயி நடனம் அமைந்தது. பிரபல நடனகுரு பத்மஸ்ரீ சித்ரா விசுவேசு வரனிடம் பரதம் பயின்றவர் என்ப தோடு, நிறைய நடன வாரிசு களையும் உருவாக்கி வருகிறார். சரயு என்ற பெயருக்கேற்ப அமைதியான நதி போன்று ஆடினார். இந்த நிகழ்ச்சியில் இவருடைய உடையலங் காரம், ஆபரணங்கள் உயர்தரமாக அமைந்து இருந்தது. சரயு சாயியின் குரு சித்ராவின் நடனப் பயிற்சியின் அழகுகள் வெளிப்படும்படி, துவக்கத்தில் நாட்டை ஜதீசுவரத்தை ஆடியது ரசிக்கும்படி இருந்தது ஜதிகளுக்கு படு அக்கறையான பாத அசைவுகளைப் பாராட்டலாம்.
தொடர்ந்து ஹரிநாராயண கவுத்துவத்தில் திருமால் அவதார சிறப்புக்கள் சதுர்வேதனாக இலங்கை அசுரனான ராவணனை அழித்தது, தீய சக்திகளை அழிப்பவன், பக்தர்களை ரட்சிப்பவன் என்பவதை கச்சிதமான அபிநயங்களுடன் ஆடினார். பிரதானமாக லால்குடியின் இன்றும் "என் மனம் அறியாது' சாருகேசி ராகம் - ஆதி தாள வர்ணத்திற்கு சிறப்பாக ஆடியது பாராட்டும்படி இருந்தது. அடிக்கடி மேடையில் இந்த வர்ணத்தைப் பலரும் ஆடிப் பார்த்தாலும், சரயு சாயியின் சில கற்பனைகளுடன் வித்தியாசமான சில சஞ்சாரிகள் ரசிக்க வைத்தன. ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுடைய ஷீரசாகர (தேவகாந்தாரி) கீர்த்தனை மூலம் ஸ்ரீஹரி பக்தர்களை காப்பவன் என்பதை ஆதி மூலமேயென்று அலறிய கஜேந்திரனை காப்பாற்றியது, திரவுபதி மானம் காத்தது ஆகிய சஞ்சாரிகளுடன் வடிவமைப்பு சிறப்பாக இருந்தது. காயத்ரி சசிதரனின் நட்டுவாங்கம், மாயூரம் சங்கருடைய அனுசரணையான லயம் - முருகானந்தம் வயலின் வாசிப்பு, சேது மாதவன் ஒப்பனை எல்லாமே மனநிறைவை அளித்தன. - மாளவிகா

Tuesday, January 25, 2011

வலயபட்டி மலர்வண்ணணின் சிறப்பு தவில்



வலயபட்டி, நாத லயா காச்யப்பின் கடைசி நாள் எப்போதும் அமோக வரவேற்புடன், பெரும் எதிர்பார்ப்புடன் காணப்படும். வலயபட்டி மலர்வண்ணணின் சிறப்பு தவில் உடன், நாதசங்கமமாக மிளிருவது அதன் சிறப்பு. சிறப்பு தவிலில் வலயபட்டி மலர்வண்ணன் பிரத்யேகமாக தாள சுற்றுகளை அபரிமிதமான லய ஞானத்துடன் வடிவமைப்பது தான் சிறப்பம்சம். நம் தென்னிந்திய வாத்தியங்களில் ராஜவாத்தியம் என்ற பெயர் பெற்று தனக்கென்று ஒரு இடத்தை தவில் தக்க வைத்துள்ளது. மற்ற எந்த தாள வாத்ய கருவிக்கும் இத்தனை பெரிய அரிய நாதம் கிடைத்திருப்பதாக தெரியவில்லை. தில்லானா மோகனாம்பாள், எத்தனை அழகாக தவில் வாத்தியத்தை வாசித்து, பாமரனுக்கும் இசை லயத்தை புரிய வைத்த திரைப்படம். அதைத்தொடர்ந்து சமீப காலத்தில், "வலயபட்டி தவிலு' என்ற பாடல் ரசிகர்களிடயே ஒரு கலக்கு கலக்கியது. அந்த வலயபட்டியாரின் புதல்வன் மலர் வண்ணன் தன் தந்தையை பின்பற்றி பல லயசங்க நிகழ்ச்சிகளை செய்து வருகிறார். அன்றைய தன் நிகழ்ச்சியில், அவரின் தலைமையில்சுருதி சாகர் - குழல், வயலின் - வெங்கடசுப்ரமணியன், தபலா - சந்தர், பாபநாசம் சேதுராமன் கஞ்சிரா இணைந்தனர். மல்லாரி எனப்படும் பாரம்பரிய உருப்படி கோவிலில் உற்சவர் இளமீபி அவ்விடத்திற்கு வந்து சேரும்வரை வாசிக்கும் ஒரு ப்ரத்யேக அமைப்பு. இதில் பொதுவாக வாசிப்பதிலிருந்து சற்று வேறுபட்டு ராஜ மல்லாரியாக கொடுத்து அதை திருபுட தாளத்தில், "தக திமி தகிம' என்று, அமைத்து இரட்டைகளையில் கொடுத்து முடிவில் திச்ரகுறைப்பு செய்து முடித்தார். ஆனந்த பைரவிராக, "மறி வோரகதி' கீர்த்தனைக்கு சுருதிசாகரின் குழலில் ஆனந்தம். புது வெள்ளமாகத்தான் வந்தது. அதற்கு ஈடு கொடுத்து வெங்கடசுப்ரமணியன் வயலினில் கொடுத்தார். இதற்கும் ஒருபடி மேலாகப் போய், மலர் வண்ணன் இரண்டு தவில்கள் மாற்றி, பாட்டின் போக்குக்கும் குழலுக்கு ஏற்ப தன் வாத்யத்தை மிகப் பக்குவமாகக் கொடுத்தது, அவரது அசாத்ய ஞானம். வயலின் வாத்தியத்திற்கு தவிலை அறிமுகப்படுத்தியவர் குன்னக்குடி. அதைத் தொடர்ந்து இவர் நாகஸ்வரத்திற்கு அடுத்தபடியாக, குழல் என்ற இனிமையான வாத்யம் ஒரு பக்கம், வயலின் ஒருபக்கம், இரண்டுக்கும் ஈடு கொடுத்து, வாசிக்க வேண்டும். "திருவாச்சி' அதாவது தவில் கழி. தொப்பி பகுதியில் அடித்துவாசிக்க பயன்படும் குச்சி. பொதுவாக தவில் கலைஞர்கள் இக்குச்சியினால், ஜகஜ்ஜாலம் செய்வர். நாகஸ்வரத்திற்கு தூக்கி வாசிக்கப்படும் அதே கருவி மற்றும் அதன் குச்சியை தொப்பியில் பட்டதாக தெரியாமல், தன்னுடன் வாசிக்கும் கருவிக்கு ஏற்றாற்போல் வாசித்தது மிகச் சிறப்பு. பொதுவாக தவில் வாசிக்கும் போது எட்டூருக்கு கேட்டு, ஊரையே கூட்டும். அதை இப்படி சொன்னபடி கேட்க வைக்க முடியும் என்பது மலர் வண்ணனின் கை வண்ணத்தில் தெரிந்தது. சஹானாராக, "வந்தனமு' பாடல் எத்தனை முறை கேட்டாலும், மனதை வருடும் பாடலை சுருதி சாகர்கொடுக்க தனி ஆவர்த்தனத்தில் தன் தனித்திறமையை லயத்தில் எல்லா நாடைகளிலும் காட்டி ஞானத்தை உணர்த்தினார்.இவர் நன்றாகவே ஹோம் ஓர்க் செய்துள்ளார். அன்று நிகழ்ச்சிக்கு மாயவரம் சோமு, உட்பட பல நாகஸ்வர வித்வான்கள் எல்லாரும் வந்தமர்ந்து கேட்டது சிறப்பு. மற்ற கலைஞர்கள் கச்சேரியில் இதுபோன்று வந்து உட்கார்ந்து கேட்பதை பார்க்க முடியாது. நாகஸ்வரம் தவில் கச்சேரிகளில் அத்துறை வித்வான்கள் வந்தமர்ந்தது தனி ஆவர்த்தனம் முடியும் வரை கேட்டது இத்துறைக்கு உள்ள அலாதியான சிறப்பு என்று சொல்லாம்.

ராஷ்மிகாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி



தி.நகர், வாணி மகாலில், 11ம் தேதி, ராஷ்மிகாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. நயம் பேசும் கண்களுடன் அவர் நடனம் ஆடிய விதம் அருமை. "கஜமுகா மாமுகனே' என்ற வரமு ராகக் கிருதியில் புஷ்பாஞ்சலி செய்தார். துவக்கமே, கம்பீரமாய் அமைந்தது. அதன்பின், சிவரஞ்சனி ராகத்தில், "சாமி நீ மனம் இறங்கி' என்ற வர்ணத்திற்கு, மிக அருமையாக அபிநயம் பிடித்து, ஜதியில் அனைவரையும் ஈர்த்தார். "இடது பாதம் தூக்கி' பாடலுக்கு, குரு ஸ்ரீகலா பரத்தின் பெயரைப் பறைசாற்றும்படி ஆடினார். சிதம்பரம் நாட்டியாஞ்சலியைப் பார்த்த திருப்தி ஏற்பட்டது. அடுத்த நாம சங்கீர்த்தனத்தில், "வன மாலி' பாடலுக்கு நிறைவான நடனத்தை கொடுத்தார். இப்படி அடக்கி வாசித்தது ஏன் என நாம் யோசிப்பதற்குள், லால்குடி ஜெயராமனின் தில்லானாவில், ஜதி பேசுவதைக் குறிப்பறிந்து இவர் கால்கள் பேசியது, அனைவரின் கைதட்டலைப் பெற்றது. பாடுவதற்கு எளிதாக தெரிந்தாலும், மிஸ்ர சாபு தாளத்திற்கு நடனம் ஆடுவது எவ்வளவு கடினம் என்பது ஆடுபவர்களுக்கு தெரியும். ஆனால், "அதெல்லாம் எனக்கு பெரிய விஷயமில்லை' என்பது போல், ராஷ்மிகா ஆடியது, குருவின் தீவிர பயிற்சியை எடுத்துரைத்தது.