Tuesday, January 25, 2011

வலயபட்டி மலர்வண்ணணின் சிறப்பு தவில்



வலயபட்டி, நாத லயா காச்யப்பின் கடைசி நாள் எப்போதும் அமோக வரவேற்புடன், பெரும் எதிர்பார்ப்புடன் காணப்படும். வலயபட்டி மலர்வண்ணணின் சிறப்பு தவில் உடன், நாதசங்கமமாக மிளிருவது அதன் சிறப்பு. சிறப்பு தவிலில் வலயபட்டி மலர்வண்ணன் பிரத்யேகமாக தாள சுற்றுகளை அபரிமிதமான லய ஞானத்துடன் வடிவமைப்பது தான் சிறப்பம்சம். நம் தென்னிந்திய வாத்தியங்களில் ராஜவாத்தியம் என்ற பெயர் பெற்று தனக்கென்று ஒரு இடத்தை தவில் தக்க வைத்துள்ளது. மற்ற எந்த தாள வாத்ய கருவிக்கும் இத்தனை பெரிய அரிய நாதம் கிடைத்திருப்பதாக தெரியவில்லை. தில்லானா மோகனாம்பாள், எத்தனை அழகாக தவில் வாத்தியத்தை வாசித்து, பாமரனுக்கும் இசை லயத்தை புரிய வைத்த திரைப்படம். அதைத்தொடர்ந்து சமீப காலத்தில், "வலயபட்டி தவிலு' என்ற பாடல் ரசிகர்களிடயே ஒரு கலக்கு கலக்கியது. அந்த வலயபட்டியாரின் புதல்வன் மலர் வண்ணன் தன் தந்தையை பின்பற்றி பல லயசங்க நிகழ்ச்சிகளை செய்து வருகிறார். அன்றைய தன் நிகழ்ச்சியில், அவரின் தலைமையில்சுருதி சாகர் - குழல், வயலின் - வெங்கடசுப்ரமணியன், தபலா - சந்தர், பாபநாசம் சேதுராமன் கஞ்சிரா இணைந்தனர். மல்லாரி எனப்படும் பாரம்பரிய உருப்படி கோவிலில் உற்சவர் இளமீபி அவ்விடத்திற்கு வந்து சேரும்வரை வாசிக்கும் ஒரு ப்ரத்யேக அமைப்பு. இதில் பொதுவாக வாசிப்பதிலிருந்து சற்று வேறுபட்டு ராஜ மல்லாரியாக கொடுத்து அதை திருபுட தாளத்தில், "தக திமி தகிம' என்று, அமைத்து இரட்டைகளையில் கொடுத்து முடிவில் திச்ரகுறைப்பு செய்து முடித்தார். ஆனந்த பைரவிராக, "மறி வோரகதி' கீர்த்தனைக்கு சுருதிசாகரின் குழலில் ஆனந்தம். புது வெள்ளமாகத்தான் வந்தது. அதற்கு ஈடு கொடுத்து வெங்கடசுப்ரமணியன் வயலினில் கொடுத்தார். இதற்கும் ஒருபடி மேலாகப் போய், மலர் வண்ணன் இரண்டு தவில்கள் மாற்றி, பாட்டின் போக்குக்கும் குழலுக்கு ஏற்ப தன் வாத்யத்தை மிகப் பக்குவமாகக் கொடுத்தது, அவரது அசாத்ய ஞானம். வயலின் வாத்தியத்திற்கு தவிலை அறிமுகப்படுத்தியவர் குன்னக்குடி. அதைத் தொடர்ந்து இவர் நாகஸ்வரத்திற்கு அடுத்தபடியாக, குழல் என்ற இனிமையான வாத்யம் ஒரு பக்கம், வயலின் ஒருபக்கம், இரண்டுக்கும் ஈடு கொடுத்து, வாசிக்க வேண்டும். "திருவாச்சி' அதாவது தவில் கழி. தொப்பி பகுதியில் அடித்துவாசிக்க பயன்படும் குச்சி. பொதுவாக தவில் கலைஞர்கள் இக்குச்சியினால், ஜகஜ்ஜாலம் செய்வர். நாகஸ்வரத்திற்கு தூக்கி வாசிக்கப்படும் அதே கருவி மற்றும் அதன் குச்சியை தொப்பியில் பட்டதாக தெரியாமல், தன்னுடன் வாசிக்கும் கருவிக்கு ஏற்றாற்போல் வாசித்தது மிகச் சிறப்பு. பொதுவாக தவில் வாசிக்கும் போது எட்டூருக்கு கேட்டு, ஊரையே கூட்டும். அதை இப்படி சொன்னபடி கேட்க வைக்க முடியும் என்பது மலர் வண்ணனின் கை வண்ணத்தில் தெரிந்தது. சஹானாராக, "வந்தனமு' பாடல் எத்தனை முறை கேட்டாலும், மனதை வருடும் பாடலை சுருதி சாகர்கொடுக்க தனி ஆவர்த்தனத்தில் தன் தனித்திறமையை லயத்தில் எல்லா நாடைகளிலும் காட்டி ஞானத்தை உணர்த்தினார்.இவர் நன்றாகவே ஹோம் ஓர்க் செய்துள்ளார். அன்று நிகழ்ச்சிக்கு மாயவரம் சோமு, உட்பட பல நாகஸ்வர வித்வான்கள் எல்லாரும் வந்தமர்ந்து கேட்டது சிறப்பு. மற்ற கலைஞர்கள் கச்சேரியில் இதுபோன்று வந்து உட்கார்ந்து கேட்பதை பார்க்க முடியாது. நாகஸ்வரம் தவில் கச்சேரிகளில் அத்துறை வித்வான்கள் வந்தமர்ந்தது தனி ஆவர்த்தனம் முடியும் வரை கேட்டது இத்துறைக்கு உள்ள அலாதியான சிறப்பு என்று சொல்லாம்.