Monday, February 14, 2011

பாராட்டு பெற்ற சாய்தர்ஷிணியின் அரங்கேற்றம்

 நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருப்பது நடன நிகழ்ச்சிகள். அதிலும், குறிப்பாக நடன அரங்கேற்றங்கள் பல முழுமை பெறாமல், அதாவது ஆடுபவர்கள் முதிர்ச்சி பெற்று கொடுக்காமல் ஏனோ தானே என்று தான் நடைபெற்று வருகின்றன. அரங்கேற்றம் என்று கற்றுக் கொண்ட ஒன்றரை ஆண்டுகளுக்குள், அனைத்தையும் முடித்து விடும் பலர் உள்ளனர். அவர்களுக்கென்று சில சபாக்களில் நடன நிகழ்ச்சி நடத்த காசு கொடுத்து, நேரம் பிடித்து தரப்படுகிறது. அப்படி அவர்கள் அளிக்கும் நடனத்தை, யார் பார்ப்பது என்று தான் புரியவில்லை. இந்த அறியாமையிலிருந்து மீண்டு அவர்கள் வெளியில் வரமாட்டார்களா? நல்ல நடனம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள மாட்டார்களா என்ற ஆதங்கம் நிறைய தோன்றுகிறது.
இந்த விழிப்புணர்வு, பெற்றோருக்கும் ஆடுபவர்களுக்கும் கண்டிப்பாக வந்தே தீர வேண்டும். இல்லையேல், இப்போதுள்ள விலைவாசியில் ஒரு கலைக்கு நாம் செலவிடும் பணம் கூட, "விழலுக்கு இறைத்த நீர் போல்' ஆகி விடும். ஆனால், மேற்சொன்ன அனைத்திலுமிருந்து குறை என்று சொல்ல முடியாத அளவு, அர்த்தமுள்ள அரங்கேற்றமாய் நடந்தது சாய்தர்ஷிணியின் அரங்கேற்றம். சாய்தர்ஷிணியின் குரு தஞ்சை அருணாச்சலம், ஜெயலட்சுமி அருணாச்சலம், டாக்டர் சரஸ்வதி மற்றும் கலாஷேத்ராவின் ரகுராமன், மோகன் ஆகியோரிடம் பயின்று, நடனத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். குச்சுப்புடி நடனத்திற்காக மாதவ பெட்டி மூர்த்தியிடம் பயிற்சி எடுத்தவர்.
பல விருதுகளையும் பல நடன நிகழ்ச்சிகளையும் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் கொடுத்து வருபவர் சாய்தர்ஷிணி. அனுபவமிக்க இப்படியொரு குருவை பெற்றதால் தான், அவருக்கு மிக இயல்பாகவே நடனத்தை உள்வாங்கி ஆடும் திறன் உள்ளது. தன் ஏழு வயது முதல் நடனம் பயிலத் துவங்கி இன்று பி.எஸ்., சீனியர் செகண்டரி பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். படிப்பிலும் மட்டுமல்லாது, பல துறைகளிலும் தன்னை மேம்படுத்திக் கொண்டு, தன் நடனப்பள்ளி மூலம் 75 நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்திக் கொடுத்துள்ளார்.
ஆடுபவர்களுக்கு உடல் அமைப்பு குறிப்பாக, முகத்தில் கண்கள் விழி பேசும் கண்களாக, கவி பாடும் கண்களாக அமைந்திருத்தல் வேண்டும். அப்படி கண், மூக்கு<, புருவங்கள் எல்லாம் ஒரு சேர அமைவது மிகக் கடினம்.
தர்ஷிணியின் குரு ஹேமலதா நட்டுவாங்கத்திலும், சொக்கத்தங்கக் குரலில் மீரா ரமேஷ், மிருதங்கத்தில் சேகர், வயலினில் சீனிவாசன், குழலில் சங்கர நாராயணன் ஆகிய அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு, ஒரு குரலிசை கச்சேரிக்கு பக்கவாத்தியம் போல் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். ஒப்பனை சுமதி, தர்ஷிணியின் முகத்தை மிகைப்படுத்தாமல் நேர்த்தியாக ஒப்பனை செய்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக பங்கெடுத்த அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன் இருவரும் சாய்தர்ஷிணியை புகழ்ந்து தள்ளினர். இத்தனை பாராட்டுதல்களுக்கும் 1 சதவீதம் குறைவில்லாமல், தன் நடனத்தை கொடுத்தார் சாய்தர்ஷிணி.
மல்லாரி என்ற இசை வடிவத்திற்கு தன் நடனத்தை புறப்பாட்டு நடனமாக முதலில் பாரம்பரியமாகக் கொடுத்தார். மோகன ராக ஜதிசீவரம் மனதை கொள்ளை கொண்டு போனது. அடுத்த ராக மாலிகையாக அமைந்த சப்தத்திற்கு, தர்ஷிணியின் நடனம் அருமை. மயிலையின் அக்காலத்து அழகை, பாட்டில் மிக அழகாகக் கொடுத்திருந்தனர். மாட மாளிகை, கூட கோபுரம், மாட வீதி கண்டீரோ? வாசலில் மாக்கோலம் போட்டு தோரணமிட்டு அலங்கரித்து உற்சவர் வீதியுலா வரும் போது, கூடி இருப்பவர் பஜனை செய்து பாடி வர, பல்லக்கில் அவரது அழகு பவனியையும், ஈசனும் நாயகியும் எத்தனை அழகுடன் இருந்தனர்' என்பதற்கு கயல்விழியின் அழகு கற்பகத்தில் பூரண நிலவு போல் அதில் கருணை மட்டும் கடலாய் தெரிய அன்னையின் உயர்ந்த அருளுக்கு ரசிக்கக் கிடைத்தது.
மேலும், மாலை வேளையில் பெண்கள் தங்களை மிக நேர்த்தியுடன் அலங்கரித்துக் கொண்டு எப்படி தங்களை ஆன்மிகத்துடன் இணைத்துக் கொண்டனர் என்று பல அரிய செய்திகளை உள்ளடங்கிய அம்சமாக மிளிர்ந்தது.
நடன மணிகளுக்கு பெயர் வாங்கி தரும் வர்ணம் ஷண்முகப்பிரியா ராகத்தில் அமைந்ததை மிக அற்புதமாக கொடுத்தார். தேவர், முனிவர் தொழும் பாதம் ஜகநாதன் என்ற வரிகளில் தேவர்களும், அசுரர்களும் மந்திர மலையை கடைந்தது, மோகினியாய் மீறி அமிர்தம் பரிமாறியது, கருட வாகன பெருமானாய், திருமகள் உறை மார்பனாக, மகாபாரத கண்ணனாக, பாஞ்சாலியாக, சகுனியாக, தருமனாக, துச்சாதனனாக, வாமனனாக, அனைத்து அவதார மூர்த்தியாக திருவேங்கடகிரி கமலக்கண்ணனாக ஏழு மலை யானை விதம் விதமாக நமக்கு மயிலையில் காணக் கிடைத்தது,
பாரதியின் சின்னஞ்சிறு கிளியே-வில் கனவுக் குழந்தை கண்ணம்மா மீண்டும் உயிர்த்தெழுந்தான் தர்ஷிணியின் நடனத்தில். இக்காலத்து அம்மாக்கள் இவர் நடனத்தை பார்த்தாவது, குழந்தை வளர்ப்பை கற்றுக் கொள்ளட்டும் என்பது போல் இருந்தது. கல்யாண வசந்த ராகத்தில் அமைந்த தெவிட்டாத திருநடனம் பாடல் நிஜத்திலும் தெவிட்டாமலும், தில்லானா அம்ருத வர்ஷிணிராக மதுரை முரளீதரனின் சாகிதயம் மிக அற்புதமாகக் கொடுத்தார் சாய்தர்ஷிணி. அரங்கேற்றம் என்பதற்கு உண்மையான பொருளுணர்த்திய நடனம் என்றால் அது மிகையல்ல.