Monday, February 14, 2011

மன நிறைவை தந்த இரு நடனங்கள்



கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் நாட்டிய விழாவில் இரு நடன நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைந்தன. இதில் நாரத கான சபா மினி அரங்கில் ஐஸ்வர்யா நடன நிகழ்ச்சி நடந்தது. நடன குரு ஆச்சார்ய சூடாமணி அனிதா குகா நடனத்தில் சிறந்த உத்திகளை புகுத்தி சாதனை படைத்து வரும் கிரியேட்டிவ் குரு. ஐஸ்வர்யாவின் அழகான தோற்றம், உயரம், கொடியுடல், துடியிடை எல்லாமே படு ப்ளஸ் அம்சங்கள் என்பதால், மேடையில் அவர் தோன்றிய உடனேயே ரசிக உள்ளங்களும் பறி போகின்றன.
இளம் பாடகர் முரளி பார்த்தசாரதியின் இசை அமைப்புடன் அமைந்த வலஜி ராக புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியின் துவக்கத்தில் மனதை குளிர வைத்தது. ஐஸ்வர்யாவின் அருமையான பாதவேலைகள் கூடுதல் மெருகாக துவக்கமே படுஜோர் என்று கூறலாம்.ஐஸ்வர்யா பிரதானமாக ஆட எடுத்து கொண்ட தஞ்சை நால்வர்களுடைய அபூர்வமான வர்ணமான கருண ஜுட (மிச்ர சாபு) என்ற அரிய இந்த உருப்படியை எடுத்து ஆடினார். பிரபல சமஸ்கிருத மேதை டாக்டர் ராகவன் இசை நாட்டியத் துறைக்கு செய்த சேவைகள் எண்ணற்றவை. குறிப்பாக அவருடைய புதல்வி நந்தினி ரமணியும் தஞ்சை கிட்டப்பா பிள்ளையும் கடும் உழைப்பில் வெளிக் கொணர்ந்த தஞ்சை நால்வர் நாட்டிய இசை நூல் வெளியிடும் தருணத்தில், தஞ்சை கிட்டப்பா பிள்ளையின் மறைவு பெரும் இழப்பாக இருந்தது.
அவர் மறைந்து ஒரு மாதத்திற்கு பின்பு நடைபெற்ற டிசம்பர் சீசனில், சென்னை மியூசிக் அகடமியில் இந்த தஞ்சை நால்வர் இசை உருப்படிகளை கொண்ட நூல் வெளிப்பட்டது. கிட்டத்தட்ட பதினைந்து உருப்படிகள் இந்த நூலில் இருந்தன. இந்த நூலில் இருந்து இப்படிப்பட்ட அபூர்வமான வர்ணத்தை ஆட அனிதா திட்டமிட்டது பெரும் ஆறுதல். வழக்கமாக பார்த்து அலுத்துப் போன வர்ணங்களை விட, இது பார்க்க படு சுவாரசியமாக வும் தஞ்சை பிரகதீசுவரர் மீது காதல் கொண்ட நாயகியின் தாப உணர்ச்சிகளை வரிக்கு வரி ஐஸ்வர் யாவின் அபிநயத் திலும் பளிச்சென்று இருந்த கடவுகள், தீர்மானங்களில் லயம் பிறழாமல் நின்று ஆடிய ஈடுபாடு அருமை.எல்லாமே படு உயர்வான கற்பனைகளுடன் இருந்தன. இந்த வர்ணத்தின் உட்பொருள். ஜதிக்கோர்வை களுக்கு ஏற்ப கட்டுக்கோப்பான அமைப்பு எல்லாமே தஞ்சை நால்வர்களுடைய பொற்காலத்தை நினைவூட்டின என்பதே உண்மையான அனுபவம். சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் காவடி சிந்து (திச்ர சதுச்ர நடை) நடன அமைப்பும், லயமும் முதல் தரமாக மனம் கவர்ந்தன. வீணை சேஷண்ணா இயற்றிய செஞ்சுருட்டி தில்லானா நிகழ்ச்சியில் மற்றொரு அபூர்வ உருப்படியாக பார்க்க மனம் மகிழ்ச்சியாக இருந்தது.
ஆச்சார்ய சூடாமணி அனிதா குகாவின் உயர்வான நடன அமைப்பு, நட்டுவாங்கம், அரி பிரசாத்தின் மதுரமான பாட்டு, ராம்சங்கர் பாபுவின் சிறப்பான லயம், ரமேஷ் குழ லிசை எல்லாமே கூடுதல் மெருகு நிகழ்ச்சிக்கு. ஐஸ்வர்யா எதிர் காலத் தின் நம் பிக்கை நட்சத் திரம் என்பது நிச்சயம். சரயு சாயி: மற்றொரு நடன மணி சரயூ சாயி நடனம் அமைந்தது. பிரபல நடனகுரு பத்மஸ்ரீ சித்ரா விசுவேசு வரனிடம் பரதம் பயின்றவர் என்ப தோடு, நிறைய நடன வாரிசு களையும் உருவாக்கி வருகிறார். சரயு என்ற பெயருக்கேற்ப அமைதியான நதி போன்று ஆடினார். இந்த நிகழ்ச்சியில் இவருடைய உடையலங் காரம், ஆபரணங்கள் உயர்தரமாக அமைந்து இருந்தது. சரயு சாயியின் குரு சித்ராவின் நடனப் பயிற்சியின் அழகுகள் வெளிப்படும்படி, துவக்கத்தில் நாட்டை ஜதீசுவரத்தை ஆடியது ரசிக்கும்படி இருந்தது ஜதிகளுக்கு படு அக்கறையான பாத அசைவுகளைப் பாராட்டலாம்.
தொடர்ந்து ஹரிநாராயண கவுத்துவத்தில் திருமால் அவதார சிறப்புக்கள் சதுர்வேதனாக இலங்கை அசுரனான ராவணனை அழித்தது, தீய சக்திகளை அழிப்பவன், பக்தர்களை ரட்சிப்பவன் என்பவதை கச்சிதமான அபிநயங்களுடன் ஆடினார். பிரதானமாக லால்குடியின் இன்றும் "என் மனம் அறியாது' சாருகேசி ராகம் - ஆதி தாள வர்ணத்திற்கு சிறப்பாக ஆடியது பாராட்டும்படி இருந்தது. அடிக்கடி மேடையில் இந்த வர்ணத்தைப் பலரும் ஆடிப் பார்த்தாலும், சரயு சாயியின் சில கற்பனைகளுடன் வித்தியாசமான சில சஞ்சாரிகள் ரசிக்க வைத்தன. ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுடைய ஷீரசாகர (தேவகாந்தாரி) கீர்த்தனை மூலம் ஸ்ரீஹரி பக்தர்களை காப்பவன் என்பதை ஆதி மூலமேயென்று அலறிய கஜேந்திரனை காப்பாற்றியது, திரவுபதி மானம் காத்தது ஆகிய சஞ்சாரிகளுடன் வடிவமைப்பு சிறப்பாக இருந்தது. காயத்ரி சசிதரனின் நட்டுவாங்கம், மாயூரம் சங்கருடைய அனுசரணையான லயம் - முருகானந்தம் வயலின் வாசிப்பு, சேது மாதவன் ஒப்பனை எல்லாமே மனநிறைவை அளித்தன. - மாளவிகா